சிவராத்திரியில் என் டைரி குறிப்புகள்

Pratheba Pratheba Follow Feb 22, 2020 · 5 mins read
சிவராத்திரியில் என் டைரி குறிப்புகள்
Share this

ரொம்ப நாளா என் வலைப்பக்கம் தூங்குது….ஏதோ ஒன்னு எழுதனும்ன்னு நினைச்சு நினைச்சு எல்லாம் பாதியில் தொங்குது….

நடுவில் ஒரு update வந்து Ghost blog செயலியையும் என்னோட Draft களையும் முடக்கிடுச்சு. கஷ்டப்பட்டு எழுதின எதுவும் மறுபடி தொடர முடியாமல் போனது.

சரி இப்போ நான் கதைக்கு வரேன்.‌‌ இன்னைக்கு நான் Masters படிச்ச கல்லூரிக்கு போனேன். எதுக்குன்னு கேட்டா கடைசி நாள் கல்லூரி முடிச்ச பிறகு அந்த பக்கம் போகவே இல்ல. எந்த சான்றிதழும் வாங்கல.

கல்லூரியில் படிக்கும் போதே கல்யாணம் பண்ணியாச்சு. Project Viva வின் போது கருதரிச்சாச்சு.

நான் இளநிலை பொறியியல் கல்லூரியில் நுழையும் போது எனக்கெல்லாம் 27 வயசில் தான் கல்யாணம் ஆகுமென்று கணக்கு போட்டு வைத்திருந்தேன். இப்போ வயசு 26 முடியபோகுது… என் குழந்தை ஒரு மாசமா பள்ளிக்கு போகுது….

அப்போது இந்திய ஆட்சிப்பணிக்கு போகணும் என்று எண்ணம். யூ மீன் ஐ.ஏ.எஸ்..? ன்னு கேட்டா ஆமாங்க அதேதான். சின்ன வயசுலேர்ந்து கனவு…‌‌எப்போலேர்ந்துன்னா ரெண்டு வயசுல சூரியவம்சம் படத்துல தேவயானிய பாத்ததுலேர்ந்து கடைசியா அறம் படத்து நயன்தாரா பாத்தது வரை…

சினிமா மட்டும் பாத்து இல்லை… சகாயம், இறையன்பு,ராதாகிருஷ்ணன் இன்னும் பலர் பத்தி படிச்சு, பல வகுப்புகளில் போய் உக்காந்து என பல செஞ்சாச்சு கல்லூரி இரண்டாவது ஆண்டுக்குள்….

‌‌பின்னர் ஒரு போலீஸ் பெண் உயரதிகாரி மன அழுத்தம் காரணமா தற்கொலை செஞ்சுகிட்டாங்க என்று செய்தி வந்தது. பெண் உயரதிகாரிகள் வாழ்வில் நிம்மதியில்லை என்று சொல்வதாய் அப்பாவும் சொல்வார்.

மனம் ஒரு குரங்கு அல்லவா ?? தவ்விவிட்டது… எதன் மேல்… ஆராய்ச்சியின் மேல்… அதாவது உயர்படிப்பு படித்து சைன்டிஸ்ட் ஆகவேண்டுமென்று…. இது ஆரமிச்சு ரெண்டே வருஷத்தில் கல்யாணம் என்று ஆரமித்தார்கள்… என் வயசு பெண்கள் எல்லோருக்கும் ஒரே ஆண்டில் திருமணம் நடந்தது.

‌‌21 வயதில் சொந்த பந்தமெல்லாம் போகும் இடங்களில் முதிர்கன்னி என்று முத்திரை குத்த தொடங்க, எங்கம்மாவுக்கு மனசுல என்ன தோனிச்சோ தெரில மாப்பிள்ளை வேட்டை ஆரம்பம். 6 மாதத்தில் டும் டும் டும்…‌‌கல்யாணம் பாட்டுக்கு ஆகுது நாம பாட்டுக்கு படிப்போம்ன்னு நெனச்சு சரின்னேன்.

‌‌அடுத்த ஆறு மாதங்கள்… பேரப்பிள்ளை பற்றி கேள்வி வந்ததாம் இரு வீட்டுக்கும். மகப்பேறு மருத்துவரை பாக்கணும் என்று திட்டம் போடத் தொடங்கினர்…‌‌350 கிலோமீட்டர் தொலைவில் இருந்தால் எப்படி ?? என்ற அடிப்படை யாருக்கும் புரியவில்லை. கணவருக்கும் உடன்பாடு இல்லை. இருந்தும் கஷ்டப்பட்டு செய்த என் project viva அன்று வாந்தி மயக்கம் ஆனது.

‌‌என் கூட படித்த பசங்க பேசிக்கொண்டது மயக்கத்தில் அரைகுறையாய் காதில் விழுந்தது… “என்ன மச்சா… இவ இவ்ளோ சீக்கிரம் செட்டில் ஆகிட்டா ??? இன்னும் நிறைய செய்வான்னு நினைச்சேன் !!!!! “ நானும் அப்படித்தான் நினைச்சேன்…. விதியோ சதியோ… வாழ்க்கை மாறிபோச்சு…

‌‌இந்த நண்பர்களின் உதவியை பற்றி சொல்லியே ஆகவேண்டும். விடுதியில் படியேறுவத்தில் இருந்து, சாப்பாடு, என் ப்ரொஜெக்ட் புக் பைண்ட் செய்வது வரை தனியே எதுவும் செய்ய எனக்கு அனுமதியில்லை என் தோழிகளிடம் இருந்து… உண்மையில் வீட்டில் கூட அவ்வளவு பத்திரமாய் நான் நடந்துகொண்டது இல்லை.

‌‌கல்லூரியில் கடைசி நாளன்று 75 நாள் கருவுற்றிருக்கும் என்னை வழியனுப்பி வைக்க வகுப்பில் உள்ள அனைவரும் ரயில் நிலையம் வந்தனர். இரவு 12 மணிக்கு ரயில்… அந்த பெட்டி முழுதும் ஆட்கள் நின்றதால் வந்தவர்கள் குழம்பிபோயினர். ஒரு ஆளை வழியனுப்ப இவ்வளவு பேரா என சிலர் சொன்னதும் காதில் விழுந்தது… அதாங்க நட்பு…

‌‌ஊருக்கு வந்தேன்… அப்புறம் குழந்தை பிறக்கும் வரை அதைப்பற்றி மட்டுமே நினைத்து மகிழ்வாய் இருக்கவேண்டும் என மனமாற்றம் செய்து கொண்டேன். என் கவனம் முழுதும் அந்த குழந்தை வெளிவரும்போது உலகம் அழகானதாய் இருக்க எல்லாம் செய்ய வேண்டும் என்பதே….

சுகப்பிரசவம் ஆனது… அது சுகமான பிரசவமா என்றால் இல்லை!!!! சொல்லப்போனால் இந்த பெயர் தவறானது… அது சுய பிரசவம் என்பதாகும்… மருவி சுகமென்றானது…

என் நாட்கள் இனிதாகின… அவன் தான் எல்லாம்… “அந்த முதல் பார்வை மற்றும் ஸ்பரிசம்…. எவ்வளவு அழகானது…”

ஆனால் நடுவில் ஒரு நிகழ்வு… குழந்தை பிறந்து அவனை தூக்கிச்சென்றாகி விட்டது… 3 மணிநேரம் நான் மட்டும் தனியறையில்… “பத்து மாதம் தனிமையிலும் துணையாய் இருந்த ஒன்றையும் தூக்கிபோய்விட்டீர்கள் !!!!‌‌யாராவது இருக்கீங்களா !!! நான் மயக்கம் தெளிஞ்சுட்டேன்… என் குழந்தை எங்கே!!! என் அம்மா எங்கே !!! அப்பா !!! பயம் வரும்போதெல்லாம் நீங்கள் தானே துணை!!! இப்போ எங்க போனீங்க !! ஏ கட்டுன மனுசா !!! நேத்தே சொல்லியும் ஏன் நீங்க இன்னும் என் பக்கம் வரலை ??? “‌‌

எல்லாரையும் அழைத்தாயிற்று… யாரும் வரல… அந்த மூன்று மணி நேரம் மட்டும் தான் நான் வாழ்வில் மிகப்பெரிய தனிமை மற்றும் பயத்தை உணர்ந்தேன்.‌‌ பின்னர் 8 மணிக்கு வந்த நர்சுகளால் விமோசனம் பெற்றேன்.‌‌இதை இங்கு குறிப்பிட வேண்டுமா என்று தெரியவில்லை. ஒரு ஒட்டதுல வந்துடுச்சு…

‌‌இவ்வாறாக வாழ்வே தலைகீழானது. அவனுக்கு பிடித்தது சமைக்க, அவனை சாப்பிட வைக்க, அவன் விளையாட, அவன் விழாமல் நடக்க, அவன் அழாமல் இருக்க இவற்றை செய்யவே நாள் போதாமல் தவித்துக்கொண்டு இருக்கையில் வந்தது பட்டமளிப்பு விழா…. இப்போ இல்லைங்க… அது முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சு… குழந்தையை வைத்துக்கொண்டு எங்க போற என்ற வழக்கமான வார்த்தைகள்.

‌‌இதற்கிடையில் நான் ஒன்றும் என் ஆராய்ச்சி மனப்பான்மையை விட்டுவிடுவதாய் இல்லை. சமையலறையில் ஒரு புரட்சி செய்தேன், என் கணவர் கொதிக்கும் வரை…..

சரி பாவமென்று விட்டுவிட்டு ஒரு தையல் மிஷின் வாங்கினேன். அம்மாவின் தயவால் கொஞ்சம் ஆர்வமிருந்தது அதிலும். யூடியூப்பில் பார்த்து பல முயற்சிகள் இதிலும். ரொம்ப மோசமில்லை.

அவ்வப்போது சில மென்பொருட்களின் மேல் எனக்கு தீராத காதல் வரும். அவற்றை ஒருவழி செய்து வைப்பேன்… Revit, E Tabs, Photoshop, Ansys என்று… கடைசியாக Blender… அதை நானாகவே குழந்தையை வைத்துக்கொண்டு செய்ய நினைத்தது பெரிய blunder.

மடிக்கணினியை மடித்து ஓரமாக வைத்துவிட்டு நான் ஊரில் இல்லாதபோது தான் சமைக்க கணவர் வாங்கின Oven பக்கம் திரும்பி சிறுதானியத்தில் கேக் மற்றும் ரொட்டிகள் செய்தேன். இப்படி ஏதோ ஒரு வகையில் ரெண்டு பேரை கொடுமை செய்து வாழ்ந்து வந்தேன்.

‌‌சரி குழந்தையை பள்ளிக்கு அனுப்புறோமே, இனி கொஞ்சம் ஏதாச்சும் செய்யலாம் என்று சான்றிதழ் வாங்க போலாம் என்று முடிவெடுத்தோம்.‌‌சிவராத்திரிக்கு கர்நாடகாவில் விடுமுறை ஆதலால் மூன்று நாள் விடுமுறையில் வந்தோம். இங்கே பாத்தா திருமலை படத்தில் வருவது போல “டேக் டைவர்சன்” சொல்லியே எங்களை பாலக்காட்டுக்குக்கு அனுப்பி விட்டார்கள்…

எல்லாம் அவன் செயல்… சிவன் பெயர் சொல்லி ஊரையே மாற்றிவிட்டார்… முன் உள்ள வார்த்தைகளை சேர்த்து படிக்கவும்..

எம்.ஈ படிக்கும் போது என் வகுப்பு பையன்கள் ஊட்டிக்கு டீ குடிக்க போனோம் என்றும் பெண்கள் பாலக்காட்டுக்கு காபி குடிக்க போனோம் என்றும் சொல்லிக்கொள்வார்கள். அது நினைவு வந்து ஒரு காபி சாப்பிட்டு வண்டியை கல்லூரிக்கு விட்டோம். மலை பாதையெல்லாம் சுத்தி ஒருவழியா கல்லூரிக்கு வந்து சேந்துட்டோம்‌‌இங்கே வந்தா எதுவுமே மாறலங்க…

எங்க மேம் அப்படியே அதே மாதிரி இருக்காங்க… அதே புன்னகையோட… நான் நேசித்த ஆளுமைகள் எல்லாரும் அப்படியே இருக்காங்க… கல்லூரியும் கூட அப்படியே இருக்கு… புதுசா பல கட்டிடங்கள் முளைச்சுருக்கது தவிர… என் நட்புகளை ரொம்ப மிஸ் செய்தேன்… எங்கள் செல்பி ஸ்பாட்கள், லைப்ரரி எல்லாம் கூட அப்படியே இருக்கு… நான் மட்டும் மொத்தமா மாறி நிக்குறேன்.

‌‌என்னை யாருமே மறக்கல… அது ஒரு பெரிய மகிழ்ச்சி…ஹெச். ஓ. டி சாரும் ஞாபகம் வச்சு இருந்தார்.‌‌அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்… “என்ன செய்றீங்க.. ஹவுஸ் வைப் சார்…“‌‌”சரிம்மா உன் படிப்பை வச்சு என்ன செய்றீங்க ??”

‌‌நானெல்லாம் வேலைக்குபோக வேண்டும் என்ற எண்ணத்தை மறந்தேபோனேன்.‌‌இதுபற்றி பேச்செடுத்தாலும் தாழ்வு மனப்பான்மை தொற்றிக்கொள்ளும். விட்டுவிட்டேன்….

‌‌இப்போது இவர் கேட்ட கேள்வி என்னுள் ஏதோ செய்தது…‌‌அஞ்சாவதுலேர்ந்து இயற்பியல், வேதியியல், கணிததில் உள்ள எல்லாத்தையும் விளக்கி சொல்லிகுடுத்து… உன்னை படிக்க வச்சது இப்படி இருக்க தானா என்று அப்பப்போ எங்க அப்பா பார்க்கும் ஆதங்க பார்வை என் கண்ணுல நிழலாடுச்சு….

‌‌இனி நிச்சயம் ஏதாவது செய்வேன் சார் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்.

கீழே என்னோட மென்டர்…எங்க மேம்…” உன் நோலெட்ஜ வீணடிக்காமல் ஏதாச்சும் செய், என்ன உதவி வேணுன்னாலும் கேள்” என்றார். வார்த்தைகள் மட்டும் இல்லை அவர் வாழ்க்கையும் கூட எனக்கு உதாரணம் தான். பெண் வாழ்வில் ஏற்ற இறக்கம் இருக்குமென்பத்தில் அவரும் விதிவிலக்கல்ல…

எனவே உள்ளே பிறந்த உத்வேகத்துடன் அவர் கையாலேயே என் முதுகலை பட்டத்தை வாங்கிக்கொண்டு வந்தேன் அதே பழைய நிமிர்ந்த நடையுடன்…

பார்க்கிங்கில் ஒருவர் எனக்காக கரம் விரித்து அணைத்துக்கொள்ள காத்திருந்தார், என் எண்ணங்களை உணர்ந்தவர் போல்…!!!! கூடவே ஒட்டிக்கொண்டது என் கிளிப்பிள்ளையும்……

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments