சினிமாவும் வக்கிரங்களும்...

Pratheba Pratheba Follow Feb 29, 2020 · 3 mins read
சினிமாவும் வக்கிரங்களும்...
Share this

பொழுதுபோக்கு அம்சமான சினிமா எவ்வளவு தூரம் நம்மை ஊடுருவியுள்ளது ? - ஒரு பார்வை

JFW என்னும் வலைப்பக்கத்தில் பார்த்தவற்றின் சாரமும், என் கருத்துக்களும்…

‌‌இந்த தலைப்பில் எழுதவேண்டுமென பல வருடங்களாய் நினைத்திருந்தேன். இப்போது அதற்கான நேரம் வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

‌‌காரணம்… என் பிள்ளை… ஆம்…. கல்லூரியில் படிக்கும்போது ஸ்டூடண்டாக பார்த்த படங்கள் அனைத்தும் பேரண்டாக பார்த்தால் ஒரு இனம் புரியாத உணர்ச்சி தொற்றிக்கொள்கிறது. அது பயமா? கோபமா?? அல்லது வெறுப்பா ??! தெரியவில்லை.

‌‌நாம் சின்ன வயதில் இருந்தே பார்த்த பாடல்களின் அர்த்தம் இப்போது இவன் பாடுகையில் தலையில் கொட்டு வைத்தது போல் இருக்கிறது. “ காதலன் “ படம் நான் பிறப்பதற்கு முன்பே வந்தது. நாம் பாடிக்கொண்டு திரிந்த அதே பாடல் குழந்தைகள் கேட்க ஏற்றதா? எனும் சிந்தனை தோன்றுகிறது.

‌‌சிங்கார வேலன் முதல் நேற்று வந்த ரஜினி முருகன், ரெமோ வரை அத்தனை படத்திலும் தனக்கு பிடித்துவிட்டால் போதும் அந்த பெண்ணின் எண்ணம் எதுவாக இருந்தாலும், அவளை பின்தொடர்ந்தால் காதலிக்க வைத்துவிடலாம் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டனர்.

இதுவொரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஆசிட் ஊற்றுவது, தற்கொலை செய்து கொள்வது, ரத்தத்தில் கடிதம் என்று சைக்கோதனங்கள்.‌‌இது அன்றாட வாழ்வில் எவ்வளவு பெண்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது தெரியுமா ??

‌‌இன்னும் ஒரு ஆணை நல்லவனாக முன்னிறுத்த வேண்டுமெனில் பெண்ணை எதிரியாக்க வேண்டும் என்பது எழுதாத விதியாக இருக்கிறது. படையப்பா படத்தில் வெளிநாட்டில் படித்து முற்போக்கு சிந்தனை கொண்ட ரம்யா கிருஷ்ணன் வில்லியாக காட்டப்படுகிறார். ‘பொம்பள பொம்பளையா தான் இருக்கணும்’ என்று வசனம் பேசும் ரஜினி கதாநாயகன் ஆகிறார். இந்த சமுதாயம் இவற்றால் தான் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண் அடங்காபிடாரி என்னும் மாயையில் உழல்கிறது இன்னும்.

கதாநாயகன் செய்யும் வன்முறை அத்தனையும் ஏற்றுக்கொள்பவள் உத்தமி… எதிர் கேள்வி கேட்டால் ஆணவம். கதை சொல்லலில் பெண் உணர்வுகள் எதற்கும் மதிப்பில்லை. ஆண் எழுதி, நடித்து , பாடி, இசை அமைத்து… இதில் இவர்கள் ஆட்டி வைக்கப்படும் தோல் பாவைகளே…

‌‌பழைய படங்களை எடுத்துக்கொள்வோம்… ‘ஆலயமாகும் மங்கை மனது’ என்று பாடி பொறுமையாக நடந்து வந்த ஜெயலலிதாவை வணங்கியும், அவர் சுதந்திரமாக வலம்வர நினைக்கும் அனைத்து படங்களிலும் எம்.ஜி.யாரால் கேலிக்கு உள்ளாகையில் கைதட்டியும் சமூகம் தன் கோட்பாடுகளை தூக்கிப்பிடிக்கிறது.

‌‌எம்.ஜி.ஆர், விஜயகாந்த் தொடங்கி சிம்பு வரை அனைவரும் பெண் என்றால் இப்படி தான் இருக்க வேணும் என வகுப்பெடுக்கிறார்கள். அதை பிடித்துக்கொண்டு பல நல்ல உள்ளங்கள், பெண்கள் போடும் லேகின்ஸ் தான் அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கெல்லாம் காரணம் என்றும் ஆடை விலகினால் ஆண் வர்க்கம் பார்க்கவே செய்யும் என்றும் பேசி வருகிறார்கள்.

இதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனம் !!!ஐட்டம் நம்பர் என்று வரும் பாடல்களை பார்த்து பார்த்து பழகிய கண்களுக்கு யாரை பார்த்தாலும் வக்கிரம் வருமோ என எண்ண தோன்றுகிறது….

‌‌அது ஏன் எல்லா படத்திலும் ஒரு குத்துப்பாடல், மது விருந்து, மதுக்கடை…?? கேட்டால் நாட்டில் நடப்பதை சொல்கிறோம் என்பார்கள்… அது வழக்கமான ஒன்றாக மாறியதற்கு காரணம் திரைப்படங்கள். மதுவும் புகையும் கேடு என்று எழுத்துகள் போட்டால் மாறிவிடுமா சமூகம்??? மதுவின் மீதே அச்சிட்டாலும் வாங்கி அருந்தவே செய்யும்.

‌‌’எவன்டி உன்ன பெத்தான்’, ‘கொலவெறி டி’ பாட்டலாம் கல்லூரியில் படித்த சமயத்தில் வரும் போகும் இடமெல்லாம் யாராவது ஒருவர் போட்டு வெறுப்பேற்றுவார். இதேபோலொரு பாடலை என் பிள்ளை கல்லூரி சென்று பாடக்கூடாது என்று நினைக்கிறேன்.

‌‌உங்களோட அக்கா அல்லது தங்கைக்கு யாராவது இப்படி தொல்லை கொடுத்தால் விடுவீரா என்று யோசித்துக்கொண்டு அதை ஆண் மக்கள் செய்ய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி யாரும் இல்லை.

திரைப்பட வசனங்கள் மற்றும் காட்சிகள் ரசிக்க மட்டுமே என்று படைப்பாளிகள் சொன்னாலும் அது சமானியரின் மனதில் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது.

ஒவ்வொருவரும் தன்னை கதாநாயகன் என நினைத்து திரைப்படங்களை வாழ்வியலில் புகுத்தி நிம்மதியை கெடுத்துக்கொள்கிறார்கள்.

‌‌அர்ஜுன் ரெட்டி என்னும் திரைப்படம். எவ்வளவு பெரிய வெற்றி… அது எவ்வளவு பெரிய வக்கிரம் என யாரும் உணரவில்லை…

சொல்லப்போனால் இப்போதெல்லாம் கோவம் என்பது பேஷன் ஆகிவிட்டது…. எதற்கெடுத்தாலும் நடுவிரலை காண்பிப்பது ஒரு வழக்கமாகிவிட்டது திரைக்காவியங்களில்…

நீ ஒரு பெண் மீது அவ்வளவு வன்முறை செலுத்து..!! ஒரு பெண்ணுக்காக இன்னும் வன்முறை நிகழ்த்து..!! என்று கற்றுக்கொடுத்திருக்கிறது.

‌‌அது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. ரசிகர்களின் மனநிலையை நினைத்தால் சிறிது வருத்தமாய் இருக்கிறது.

‌‌ஆதிகாலத்தில் இருந்து தீயவர்கள் கதாநாயகனை பழி வாங்க எடுக்கும் ஒரே ஆயுதம், அவர் குடும்பத்து பெண்களை வன்கொடுமை செய்வது… இது தான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க வைத்துள்ளது இன்றைய காலகட்டத்தில்…

அதிலும் அதில் பிழைத்த பெண்ணானவள், ஒன்று உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் அல்லது அந்த கெட்டவனை மணக்க வேண்டும். பல திரைப்படங்களில் இதுதான் கதைக்கரு.நாட்டாமை படத்து பஞ்சாயத்து காட்சி நினைவு வருதா உங்களுக்கும் ? வெட்கி தலைகுனிய வேண்டும் இன்னும் இதுவெல்லாம் தொடர்வதற்கு.

‌‌இப்படியெல்லாம் கதை சொல்பவர்களை, படம் எடுத்த பின் சென்சார் செய்வதற்கு மாற்றாக, கதையை சென்சார் போர்டு ஒப்புதல் பெற்று படம் எடுக்கலாம் என்று கொண்டு வர வேண்டும் போல…

‌‌தற்போது நிலை சிறிது மாற தொடங்கியுள்ளது… சமூக சிந்தனைகள் மற்றும் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் காலமாக திரைப்படங்கள் மாறி வருகின்றன, முக்கியமாக தமிழில்…‌‌பல நல்ல திரைப்படங்கள் வந்திருந்தாலும் சில மிக மோசமான படங்கள், அவை அத்தனையையும் தூக்கிப்போட்டு நொறுக்கி விடுகின்றன.

மாறிவரும் மக்கள் மனநிலையை கருத்தில் கொண்டு வருங்கால திரைக்கதைகள் வந்தால் மகிழ்ச்சிக்கொள்வோம்…

‌‌இப்படிக்கு

‌‌ஒரு வளரும் விதை தங்கிய கிளை…

‌‌பாடுகள் பட்டேனும், நற்காடுகள் வளர்ப்போம்…‌‌

சமூகமாய்… சுமூகமாய்…

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments