பெங்களூரில் ஒரு மழைப்பொழுது…

கம்பிகளுக்குள் நின்று கைநீட்டி
கண்களால் மழை அளக்கிறேன்…

கம்பத்தில் கண்மறைந்த மாடப்புறா
அலகினால் மழை அளக்கிறது என்னுடன்…

காற்றில் மிதந்த மழைத்துளி
என்னில் நுழைந்தது கைவழி…
சுவாசம் நிறைத்த வளி வழி…
சில்லிட்ட ஓசைகள் செவிவழி…
சிறுசிறு மின்னல்கள் விழிவழி…

தென்னங்கீற்று வழி
தெறித்துவிழுந்த சிறுதுளி…
என்னுள் தொலைந்து
மௌனத்தை வளர்க்குதடி…

செர்ரிப்பூக்களை
மரம்விட்டு பிரித்த காற்று….
செறிந்துவரும் மழைத்தூரலில்
என்னை நனைக்குதடி….

தெருவிளக்கெல்லாம் தெப்பமாய் தெரியுதடி…
காரோடும் வீதியெல்லாம் தேரோட்டம் போனதுபோல் தெருவெள்ளம் புரளுதடி…

இருள்பூக்கும் வேளைவந்தும்
செவ்வண்ணம் தீட்டுதே வானம்….
மழையடித்து முகம்கழுவி
நீலப்பட்டுச் சேலைகட்டி
உலவத்தொடங்குது வெண்ணிலா…

நட்சத்திரம்போல் மின்விளக்கு சூழ்ந்துகொள்ள…
நானும் குழப்பம்கொண்டேன் நிற்பதென்ன விண்ணிலா…