அன்பெனும் மழையில் நம்மை அதிகம் நனைய வைப்பது எப்போதுமே பெற்றோர் தான். அவர்கள் அன்பிற்கு நாம் அவர்கள் மீது செலுத்தும் அன்பு என்றும் ஈடாகாது. இதை புரிந்துகொள்ள நமக்கு வாழ்நாள் முழுதும் அவகாசம் வேண்டும்.

நாம் முதலில் இதை உணர்வது அவர்களைப் பிரிந்து விடுதியில் சேரும்போது. பெண் குழந்தை எனில் அப்பாக்களின் பாசம் பன்மடங்காகவே இருக்கும். ஒரு பெண்ணின் முதல் காதல் நிச்சயமாக அவள் அப்பாதான். தன் கணவரிடம் எல்லா பெண்களும் முதலில் அப்பாவின் குணம் உண்டா என்றே ஆராய்கிறார்கள்.

நம் நாட்டில் ஆண்கள் அழக்கூடாது எனும் எழுதா விதியுண்டு.

அப்பாக்களின் கண்கள் கண்ணீர் கசிந்து பார்ப்பது தாத்தா அல்லது பாட்டியின் மறைவின்போதாக மட்டுமே இருக்கும். அம்மாக்கள் எப்போதுமே அன்பை வெளிப்படையாக கண்ணீர் மூலம் காட்டி விடுவார்கள். நம் நாட்டில் ஆண்கள் அழக்கூடாது எனும் எழுதா விதியுண்டு. அதனால் அப்பாக்களுக்கு அந்த பழக்கமில்லை.

திருமணத்திற்கு முதல்நாள் பெண் அழைப்பு என்னும் சம்பிரதாயம் எங்கள் சமூகத்தில் உண்டு. பழைய காலத்தில் மாப்பிள்ளை வீட்டில் திருமணம் நடந்ததால் முதல் நாள் இரவே மணப்பெண்ணை பிறந்த வீட்டாரிடம் ஆசி வாங்கி நாத்தனார் முதலியோர் அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது விழிநீர் விடாத பெண்கள் மிகச்சிலரே !! அப்போது சிறுவயது முதல் நம்மோடிருந்த நினைவுகள் அவர்களின் உள்ளப் பாறைக்குள் கசியும்... எனினும் புன்னகை மாறாமல் வழியனுப்பி வைப்பார் அப்பா.

வீட்டிற்கு சென்றபின் செய்தி ஊடகம் வேண்டாம் என சண்டை போட, சமையல் அறையில் புகை கிளப்ப, கிண்டல் செய்தால் கோபம் தெளிக்க, அவ்வபோது பனி மார்கழி பொழுதுகளில் மட்டுமே வாசல் தெளிக்க மகள் இல்லை என ஒவ்வொரு நொடியும் ஏங்குபவர் அவராகவே இருக்கும்.

எல்லா ஆண்களும் அம்மாவின் சமையலை காட்டிலும் சுவையான உணவு இல்லை என்று கருதுபவர்கள். ஆனால் முதலில் சமைக்க கற்றுக்கொள்ளும் தன் மகள் மனம் மகிழ "என் அம்மா செஞ்சது மாதிரி கொஞ்சம் இருக்கு" என்று சொல்லி வைப்பார்கள். இது எவ்வளவு பெரிய பெருமிதம் என்று அனுபவித்தவர்களுக்கு தான் புரியும்.

திட்டு வாங்கியது, குட்டு வாங்கியது, சைக்கிள் ஓட்ட பழகியது, கிரிக்கெட் விளையாடியது, பாடம் சொல்லி தந்தது, படம் வரைந்தது, கடும் புளிப்பில் ரசம் வைத்து தந்தது, அம்மா வெளியில் சென்றபோது தலைவாரி விட்டது என எல்லா பெண்களுக்கும் அப்பாவை பற்றிய பொக்கிஷ நினைவுகள் சில ஆழ்மனதில் படிந்திருக்கும். அவ்வை ஷண்முகி படத்தில் வருவது போல, அப்பா வாசம் என்ற ஒன்று குழந்தைகளுக்கு எப்போதும் நினைவிருக்கும்.

ஒரு பெண்ணின் துணிச்சல் மற்றும் நற்சிந்தனைகள் நிச்சயமாக அவள்மீது நம்பிக்கை வைத்திருக்கும் தந்தையால் மாத்திரமே வளர்க்கப்படுகின்றன. மகனை மட்டுமல்ல மகளையும் அவையத்து முந்தியிருக்க செய்வது ஒவ்வொரு தந்தையின் கடமை. இந்நாட்களின் தந்தைகள் இதனை நிறைவேற்றுகிறார்கள் என்பதை மாற்றுக்கருத்தின்றி ஒப்புக்கொள்ள வேண்டும். பாசத்தில் தாயாக, அறிவுரைக்கும் ஆசானாக, சமஉரிமை தரும் சகோதரனாக, தோள் கொடுக்கும் தோழனாக, என்றும் பாதுகாவலனாக விளங்கும் தந்தைகள் ஏராளம்.

தன் இருதய நரம்புகள் கொண்டு மகள்கள் வாழ்வில் இன்னிசை பொழியும் ஆனந்த யாழ்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.