விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 7

Pratheba Pratheba Follow Jul 28, 2020 · 2 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 7
Share this

இரண்டு குடும்பத்திற்கும் மனமகிழ்வாய் சென்றது அந்த நாள்…

வீட்டிற்கு வந்தவுடனேயே அனன்யா அம்மா, கணவரிடம் “எங்கங்க யாரோ ஒருத்தி பொண்ணு பாக்கன்னு யாரு வந்தாலும் கல்ல வச்சு அடிப்பேன்னு சொன்னா…. அவள பாத்தீங்களா…!!”என்று கேட்டார்.

அனன்யாவுக்கு அப்போதுதான் அது உறைத்தது… தான் விளையாட்டுக்கு அப்படி சொன்னாலும் தன்னிடம் கல்லால் அடிவாங்கியவர் தான் மாப்பிள்ளை என்று…. முகம் சுருங்கியது…

இதை கவனித்த அனன்யா அப்பா அவள் போக்கிலேயே விடு என்று மனைவிக்கு கண்ணால் சைகைசெய்துவிட்டு அனன்யாவைப் பார்த்து கொஞ்சம் முறுவலித்தார்.

அவளை வெட்கம் பிடுங்கித்தின்றது… “அப்பா… பாருங்கப்பா…” என்று சிணுங்கிக்கொண்டே சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை போட்டாள்…

சன் ம்யூசிக்கில் “வேறெதுவும் தேவையில்லை… நீ மட்டும் போதும்..” பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

“இவனுங்க வேற ரொம்ப டிஸ்டப் பன்றானுங்கடா என்னய…” என்று நினைத்துக்கொண்டே தன் அறைக்கு செல்ல படியேறினாள்.

“தாரமே… தாரமே… வா….” என்று சித் ஸ்ரீராம் பாடி உருக்கிக்கொண்டிருந்தார்…

அவள் கைபேசி பளிச்சென்று ஒளியுமிழ்ந்தது… புது அறிமுகமில்லா எண்…

அழைப்புமணிச் சத்தம் வெளியில் வருவதற்கு முன்பே அதை அமைதிப்படுத்தி அறைக்குள் புகுந்துகொண்டாள்…

“ஹலோ…” (டப்… டப்… டப்..டப்… என்று அடித்துக்கொண்டது இதயம்)

எதிர்முனையில்… “அனு நான் தான்…”

“ம்ம்ம்ம்”…அனு என்று அவளை அழைத்தது அவன்மட்டும் தான்… அவன் குரலே தான்…

“பாத்தியா… நீயும் நானும் நம்பர் வாங்கலன்னாலும் நம்ம பேரன்ட்ஸ் ரொம்ப உஷார்… எங்க அம்மா கொடுத்தாங்க உன் நம்பர்….” படபடவென்று பேசிமுடித்தான்.

“இவங்கள்லாம் நல்ல ஆளுங்கப்பா… சத்தமே இல்லாம எல்லாம் செஞ்சுடறாங்க…” அனன்யா புன்னகைத்தாள்.

அப்புறம் பேச்சு ஏதுமில்லை…

நீண்ட மௌனத்திற்குப்பிறகு…

“எனக்கு பேசனும் போல தான் இருக்கு… ஆனா என்ன பேசுறதுன்னு தெரில…” தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தாள் அனன்யா.

“ நான் பேசலன்னா கூட அர்த்தம் இருக்கு… நீ … பேசாம இருக்க வாய்ப்பே இல்ல…” மெதுவாக கிசுகிசுத்தான்.

“என்ன சொன்னீங்க…” அவள் கேட்க..

“நீ எவ்ளோ அமைதியான பொண்ணுன்னு நெனச்சு பாத்தேன்…” சொல்லிவிட்டு சிரித்தான்.

“நான் கோவமா போறேன்…” அனன்யா பொய்கோபம் காட்டினாள்.

ஆதர்ஷ் – ஹேய் வச்சுடாத… நான் சும்மா தான்… விளையாட்டுக்கு சொன்னேன்…

அனன்யா – நானும் தான்….

இன்னும் கொஞ்சம் நேரம் மௌனம்…

இருவரும் புன்னகைத்துக்கொண்டே இருந்தனர்…

“வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்…. கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்…”

இது அவன் வீட்டில் பாடியது… தன் ப்ளூடூத் ஸ்பீக்கரில் போட்டுவிட்டான்….

அனன்யா - (புன்னகையோடு) சரி போங்க… போய் தூங்குங்க… எனக்கு நாளைக்கு சைட் விசிட் இருக்கு…. டேக் கேர்…

ஆதர்ஷ் – சரிடா…. டேக் ரெஸ்ட்… ஸீயூ… லவ் யூ…

அவள் அழைப்பை துண்டித்தாள்….

இது கேட்டு இரவு முழுதும் தூக்கம்பிடிக்கவில்லை அவளுக்கு…. வெகுநேரம் விழித்திருந்து புன்னகைத்துக்கொண்டே நடு இரவுக்குமேல் தூங்கிப்போனாள்….


மாலை மங்கும் நேரம்…. அதுவொரு கல்லூரி முகப்பு… அழகழகாய் கோலங்கள் போடப்பட்டு அவ்விடமே எழிலுடன் இருந்தது…

நான்கைந்து பெண்கள் தங்களுள் ஒருத்தியை துரத்திக்கொண்டு வந்தனர். அந்த ஒருத்தியைத் தவிர மற்றவர்கள் மொத்தமாக வண்ண சாயங்களில் மூழ்கியெழுந்தது போல இருந்தனர்.

வரும் வேகதைப்பார்க்கும்போது அவள்தான் அவர்களின் அந்த கோலத்திற்கு காரணம் என்று புரிந்தது…

அவளையும் வண்ணச்சாயங்களில் நனைக்கவே அவர்கள் ஓடிவருகிறார்கள். இதோ அவள் சிக்காமல் ஒரு வளைவில் திரும்பிவிட எதிரில் வந்த ஆதர்ஷ் மேல் வண்ண நீர் கலவைகள் ஊற்றப்பட்டன….

திரும்பிய அவளுக்கு இவன் முகம் தெரியவில்லை… “ஹேய் சாரி டூட்…” கண்கள் மட்டும் கெஞ்சின உண்மையாக வருந்தி…

அந்தப்பெண் ஓடிவிட்டாள்… ஆனால் அவள் விழியும்… அந்த பார்வையும் அவனிடமிருந்து எளிதில் விலகிவிடவில்லை.

அவளை துரத்தி வந்த பெண்களும் மன்னிப்புகேட்டுவிட்டு நகர்ந்தார்கள். கல்லூரி வாழ்வில் இவையெல்லாம் சாதாரணம் என்று அவனறிவான்.

அது விழாவிற்கு முதல் நாள்… நாளை அந்த பெரிய நிகழ்வுக்காக கல்லூரியே களைகட்டியிருந்தது… தான் அவர்களை ஏதேனும் சொல்லி அந்த உற்சாகத்தை அவன் குலைக்க விரும்பவில்லை.

மறுநாளும் அவளைப்பார்த்தான்… குறும்பும் புன்னகையும் தளும்பும் அவள் கண்கள் மிக வசீகரமானவையென்று தோன்றியது அவனுக்கு….

அவன் தேடிச்செல்லாமலே அவளைப் பார்க்க நேர்ந்தது…

பின்தொடர்ந்து செல்வதெல்லாம் அவனுக்கு விருப்பமில்லை…

நதியோட்டத்தில் நீந்திக்குளிப்பதுபோல் காலத்தின் பாதையில் பயணிக்கவே நாட்டமுள்ளவன்….

இரவு தூக்கமில்லை…

கண்ணுக்குள் அவள் கண்கள் சிமிட்டி மன்னிப்பு கேட்டதும், முகத்தில் ஆயிரம் பாவனைகொண்டு பேசுவதும் மாறிமாறி வந்தன.

அடுத்தநாளும் அவள் இதோ எதிரில் கடந்துபோகிறாள்… குழந்தைத்தனத்தின் மொத்தவுருவம்…

அடடே ஒருநிமிடம்…

அவள் இவனைப்பார்த்தே… இவன் இருக்கும் திசைநோக்கியே வருகிறாள்…

தலையில் கைவைத்துக்கொண்டே முகத்தை சுழித்துக்கொண்டு வந்து அவனிடம் வாக்குவாதம் செய்கிறாள்…

அடுத்த நாள் அதே பழைய மன்னிப்பு வேண்டும் பார்வையுடன் இவன் இருக்கும் இடங்களில் வளையவருகிறாள்.

பேசுவதற்கு ஏதுமில்லை என்பதால் அவனும் அதைக் காணாததுபோலவே இருந்துவிட்டான்…

அவள் நினைவுகள் அவனை நீங்கவேயில்லை…

நாளுக்கு நாள் விலைவாசிபோல் ஏறின…

இவன் தவிப்போ எரிபொருள் விலைபோல் உயர்ந்தது…

அவளுக்காக அதே விழாவிற்கு அடுத்த மூன்று வருடங்கள் சென்று வந்தான்.

அவளைக்காணவில்லை… பல இரவுகள் தூக்கம் தொலைத்தான்….

சில மாதங்களுக்கு பிறகு வந்த ஒரு நாள்… அந்த ஒரு நாள்….❤️

தொடரும்….

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments