விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 17

Pratheba Pratheba Follow Aug 16, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 17
Share this

ஆச்சர்யம் விலகாமல் சிலையான ஆதியும் அனுவும், மணிமேகலை இவர்கள் யாரென்று கேட்கவும், உணர்வுக்கு வந்தனர்.

உருவத்தில் ஒன்றுபோல் இருந்தாலும் அவர்கள் இருவரின் ஆளுமையும், என்ன ஓட்டங்களும் வெவ்வேறாக இருந்தன.

எப்போதுமே ஒரு பரபரப்பு, எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வம், குழந்தைத்தனம், அதிரடி அடிதடி… இது அனன்யா….

அனைவரிடமும் கனிவு, பொறுமை, அமைதி, சலனமில்லாத தீர்க்கமான அதேநேரம் துணிவு பொருந்திய அகமும் முகமும் கொண்டவள் மணிமேகலை…

“நம்ம எப்படி வந்தோம்ன்னு தெரிஞ்சா பயந்துடுவாங்க…!! அதனால அதை பத்தி சொல்ல வேண்டாம்..!!” என்று முதலிலேயே ஆதி சொல்லியிருந்ததால் அனு என்ன பேசுவது என்ற குழப்பத்தில் இருந்தாள்.

ஆதி தான் முதலில் பேசத்துவங்கினான்.

“தாயே வணக்கம்…!!! என் பெயர் ஆதன்… இவள் என் மனையாள் அனிச்சமலர்…!! வழிதவறி இந்நகரம் வந்துவிட்டோம்…!!! இவ்விடம் நாங்கள் இரண்டு நாட்கள் தங்கிச்செல்ல தங்கள் அனுமதி வேண்டும்…!!!” என்றான் பணிவுடன்.

அனுவுக்கு சிரிப்பு வந்தது… “நல்லா மகாபாரதம், ராமாயணம் எல்லாம் டி.வி யில் பாத்து பயங்கரமா செந்தமிழ் பேசரான்…!!” என்று உள்ளுக்குள்ளே நினைத்து சிரிப்பை விழுங்கிக்கொண்டிருந்தாள்.

“இந்நகரில் விருந்தினர் தங்குமிடங்கள் ஏராளம் உள்ளன ஐயா…!!! எனினும் இங்கு வந்து கேட்டமையால் மறுத்திட மனம் வரவில்லை… நீங்கள் தாராளமாக இங்கே தங்கலாம்..!!” என்றாள் மணிமேகலை, அருள் நிறைந்த மனதோடு…

“ நன்றி தாயே…!! இவ்வுதவியை நான் என்றும் மறக்கமாட்டேன்…!!” என ஆதி சொன்னான்.

இதற்கும் அனன்யா சிரித்துக்கொண்டே இருக்க, மணிமேகலை “உன் மனைவியை அழைத்து சென்று ஒருமுறை நெடுங்கல் நின்ற மன்றத்தில் வலம் செய்து விட்டு வாருங்கள்…!!!” என்று சொன்னாள்.

கட்டாயம் செய்வதாக சொல்லிவிட அனு அவனை முறைத்தாள். இவளின் செய்கைகள் ஆதிக்கு சற்று அதிருப்தி தந்தது முகத்தில் தெரிந்தது. அனுவும் ஆதர்சும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்ட அறையில் தங்குவதற்காக சென்றனர்.

அங்கு சென்றதும் அனன்யா ஆதியிடம் கொஞ்சம் காட்டமாக பேசினாள்…. “என்னதான் அவ என்னை மாதிரியே இருக்கான்னாலும்… அவ சொல்ற எல்லாத்துக்கும் நீங்கள் சரின்னா ரொம்ப அதிகமா தெரியுது…!!!! அதுவும் இல்லாம அவ என்ன லூசு னு சொல்றா….!!! நீங்க சரின்னு கேட்டுட்டு வரீங்க…!!!” என்று…

“என்ன…?! நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல…!!!! நீ சம்பந்தமில்லாம பேசுற…!!!”என்றான் ஆதி.

“என்ன அவளோ கடுப்பா பேசுறீங்க…!!!” என்று கொஞ்சம் சோகமாக சொன்னாள் அனு.

“ அப்படி எல்லாம் இல்ல அனு மா……அவங்க எவ்ளோ பெரிய ஆளு அதுவுமில்லாம இப்போ ரொம்ப கஷ்டத்துல கூட இருக்காங்க…. நீயேன் சம்பந்தமில்லாமல் சிரிச்சிட்டு இருந்த…. அவங்க முன்னாடி மரியாதையே இல்லாம நீ நடந்துக்கிட்ட மாதிரி தோனுச்சு…. அதான் கொஞ்சம் கோவமா நடந்துகிட்டேன்….. மன்னிச்சுக்கோ ப்ளீஸ்….!!!” என்று விளங்கினான் ஆதி.

“சரி இப்ப நான் கொஞ்சமா….. ரொம்ப கொஞ்சமாத்தான் கோவமா இருக்கேன்….!!!” என்று கண்ணிமைத்துவிட்டு….

அனு தொடர்ந்தாள்… “நான் சிரிச்சதுக்கு காரணம் உங்களுடைய ஸ்லாங்க் தான்… ஏதோ டப்பிங் சீரியல்கள் மாதிரியே ரொம்ப தூய தமிழ்ல பேசிட்டு இருந்தீங்க…!!! அதான் எனக்கு சிரிப்பு அடக்க முடியல….!!” என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள்.

ஆதியும் அவள் சொன்னதை நினைத்து சிரித்துவிட்டு… “அப்புறம் எதுக்கு மேடம் கோவப்பட்டீங்க…!!!” என்று கேட்க…

தன் கோபம் நினைவு வந்தவளாய்…. கொஞ்சம் முறைப்போடு “பின்னே என்ன….?? நெடுங்கல் நின்ற மன்றம் போய் சுத்தி கும்பிட சொல்றா.. நீங்க சரி ன்னு சொல்லிட்டு வரீங்க…!! அது என்ன தெரியுமா…??? புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை அழைச்சிட்டுப் போய் குணமாக வேண்டுகிற இடம்…!!!!” என்று கூறி நிறுத்தினாள்.

ஆதி சிரிக்க ஆரம்பித்தான் “அவங்க உன்ன ஒரு அப்படி நெனச்சுட்டாங்க போல…

அப்புறம் சும்மா சும்மா சிரிச்சிட்டு இருந்த எல்லாரும் என்ன நினைப்பாங்க….!!!

விடு அனு…. பழைய காலத்து மனுஷங்கல்ல…!!” என்று சமாதானம் செய்ய பார்த்தான்.

“சரி ஆதி பையா… எப்படி நம்ம நிலைமையை அவங்களுக்கு புரிய வைக்கிறது…!!! என்ன நினைப்பங்கன்னே தெரியல… எப்படி சொல்றதுன்னும் புரியல…!!!” என்று தங்கள் நிலையை நினைத்து வருந்தினாள்.

“ நான் பேசறேன்… கவலைப்படாத…!!! உடனே சொல்ல எனக்கும் பயம் தான்….!!! யோசிப்போம்….!!!” என்று சொல்லிவிட்டு அந்த அறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான்.

அனுவும் சற்றுநேரம் யோசித்துவிட்டு “நான் நேரா போய் பேசறேன் ஆதி…பொண்ணுங்களுக்கு பேச ஆயிரம் இருக்கும்… எத்தன நூறாண்டு போனாலும் இது மாறாது….குடும்பம் பத்தி, அவங்கள லவ் பண்ற ஆள பத்தின்னு ஏதாச்சும் பேசி இதை சொல்ல பாக்குறேன்…!!!” என்றுவிட்டு மணிமேகலை அறைக்குச்செல்ல அனு எழுந்தபோது….

“நீ ரொம்ப வித்தியாசமான ஆளு தான்.. தில்லு ஜாஸ்தி அனு… ஆல் தி பெஸ்ட்…!!!” என்று வெளியில் சொன்னாலும்… விபரீதம் ஏதும் வருமோ என்று ஆதி உள்ளுக்குள் பயந்தான்.

“ஏதும் பிரச்னைன்னா ஓடிடுவோம்… !! எனக்கும் அத்லெடிக்ஸ் தெரியும்…!!! பயம் உங்க முகத்துல அப்பட்டமா தெரியுது…!!” என்று கலாய்த்துவிட்டு அனு நடந்தாள்.

மணிமேகலை அறையை அடைந்தபோது… அங்கே மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் அனு காதில் விழுந்தது… “அப்பெண் உன்னைப்போலவே இருக்கிறாள்… ஆனால் அவர்கள் நம் ஊரோ அல்லது நாடோ இல்லை… வேற்று உலகத்தில் இருந்து வந்தவர்கள் போல் இருக்கிறார்கள்…!! சற்று சிந்தித்து செயல்படு…!!” என்றாள் சுதமதி.

“எனக்கும் சிறு ஐயம் உள்ளது… அதேநேரம் அவர்கள் ஏதோ சிக்கலில் இருப்பதுபோல் உள்ளுணர்வு சொல்கிறது…!!!” என நிறுத்திவிட்டு… “புகார் நகரில் வந்து, எவரும் தவறு செய்துவிட்டு திரும்ப இயலாது… எனவே அச்சம் தேவையில்லை…!!!” என்றாள் மணிமேகலை.

அனன்யா இவையெல்லாம் கேட்டு மனதில் வைத்துக்கொண்டாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்ததால், தன் காலடி சத்தம் அவர்களுக்கு கேட்கும்படி நடந்து… “நான் உள்ள வரலாமா மணிமேகலை…!!! உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..!!” என்றாள்.

சுதமதி சற்றே திடுக்கிட்டு பார்க்க, ஏதும் நடக்காதது போல்….. “உள்ளே வாருங்கள் அனிச்சமலர்…!! ஏதும் உதவி வேண்டுமா…??” என்றாள் மணிமேகலை.

“உங்ககிட்ட சில உண்மைகள சொல்லனும்… பயப்பட்டு என்னை விரட்டிவிட்டுடாதீங்க..!!!” என்றபடி நுழைந்தாள் அனு.

கேள்வியாகப் பார்த்த மணிமேகலையிடம் தங்கள் திருமணம் முடிவானது முதல் பூம்புகார் நகரில் அவளைப் பார்த்தது வரையிலான கதை முழுவதும் கூறினாள்.

சுதமதி இதனைக்கேட்டு மயங்கும் நிலைக்குச்சென்றுவிட்டாள். ஆனால் மணிமேகலை நிதானமாக எழுத்து தன் பெட்டகத்திலிருந்து சிறு மரப்பெட்டியொன்றை எடுத்துவந்து அனன்யாவிடம் தந்தாள்.

அனன்யாவுக்கும் இந்த செயல் குழப்பம் ஏற்படுத்த… “இத எதுக்கு என்கிட்ட தர்றீங்க…??” என்றாள் தயங்கியபடி… “பெற்றுக்கொள் அனிச்சமலர்…!! இதனை திறந்துபார்…!!” என்றாள் மணிமேகலை.

“இன்னொரு உதவி… இந்த அனிச்சம், இனிச்சம் ன்னு சொன்னா யாரையோ கூப்பிடுறது மாதிரி இருக்கு… என் பேரு அனன்யா… நீங்க அனு ன்னும் கூப்பிடலாம்…!!! ப்ளீஸ்…!!!…. ம்ம்ம்… ப்ளீஸ் ன்னா தயவுசெய்து…!!!” என்று நீண்ட உரையாற்றி விளக்கமும் சேர்த்து சொல்லி முடித்தாள்.

“அவ்வாறே அழைக்கிறேன் அனு… முதலில் இந்த பேழையை திறந்து பார்க்கவும்…!!!” என்று வற்புறுத்தி சொன்னாள் மணிமேகலை.

தொடரும்….

அனைத்து அத்தியாயங்களும் படிக்க

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments