விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 16

Pratheba Pratheba Follow Aug 15, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 16
Share this

அந்த ஊர் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்று இரண்டு தனித்தனியான பிரிவுகளைக் கொண்டது. அவ்விரண்டு பிரிவுகளுக்கும் இடையில் அமைந்திருந்தது நாளங்காடி.

மருவூர்ப்பாக்கம் கடலோரத்தில் அமைந்திருந்த இடமாகும். அங்கே யவனர் இருப்பு எனும் இடம் இருந்தது. யவனர் என்பது ஐரோப்பியர்கள் அதாவது கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களைக் குறிக்கும் சொல்லாகும்.

மருவூர்ப் பாக்கத்தில் துறைமுகம், ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகள், கலைஞர்கள் தொழிலாளர்கள் முதலியவர்கள் வீடுகள் ஆகியவை இருந்தன.

கொல்லர் உலைகள், சாயமேற்றும் தொழிற்கூடங்கள், நெசவு தொழில் செய்யுமிடம், சரிகை நெய்பவர்கள்,பொற்கொல்லர்கள், மணியிழைப்போர் பட்டறைகள் அனைத்தும் இங்கிருந்தன.

காவிரியாறு இப்போது இருப்பது போல் இல்லாமல் அக்காலத்தில் மிகப் பெரியதாக இருந்திருக்கிறது.

அது கடலில் கலக்கும் இடமான காவிரிப்பூம்பட்டினத்தில் எண்ணிலடங்காத ஏரிகள் இருந்திருக்கின்றன. அவற்றை தடாகங்கள் என்றனர்.

இச் சிறப்புகள் கொண்ட புகார் நகரத்தில் ஐந்து மன்றங்கள் இருந்தன. அவை தற்போதைய நீதிமன்றங்கள் போல் செயல்பட்டன.

அரசர் தவறு செய்தாலும் தண்டனை வழங்கக்கூடிய வல்லமை பெற்றிருந்த மன்றங்களவை. எனவே தவறு செய்தவர் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் எனும் நம்பிக்கை மக்களின் மனதில் வேரூன்றி இருந்தது.

ஆதலால் அங்கே தவறுகள் குறைவாகவே நடந்தன. குற்றங்கள் யாவும் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட்ட பின் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.

புகார் நகரின் நீர் மேலாண்மை மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்தது. காவிரியில் இருந்து வரும் நீரை தானாகவே நிரப்பவும் வெளியேற்றவும் தேவையான தொழில்நுட்பங்கள் கொண்ட ஏரிகள் அங்கே இருந்தன.

அங்கே பல கோவில்களும் இருந்தன. அவை அனைத்தும் முன்னோர் வழிபாட்டுக்கு உரியனவாக இருந்தன.

புத்த சைத்தியத்து இந்திரன் எடுப்பித்த விகாரங்கள் என்று சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளதனை அசோகர் காலத்தில் எழுப்பப்பட்ட ஏழு புத்த விகாரங்கள் என்று நான் பொருள் கொள்கிறேன்.

வடதிசை நாடுகளிலிருந்து கங்கைச் சமவெளி விளைபொருட்கள், இமயமலை ரத்தினங்களும், பாண்டி நாட்டு முத்து முதலியவை, கிழக்கு கடல் பவளமும், வைகை ஆற்றின் முகத்துவாரத்தில் விளைந்த வாசனைப் பொருட்களும், காவிரி பிறக்கும் இடத்திலிருந்து வந்த சந்தன மரங்களும் அகில் கட்டைகளும், காழகம் எனப்படும் பர்மாவிலிருந்து உலோக பாத்திரங்களும் என பலவாறான பொருட்கள் துறைமுகத்தில் வந்து இறங்கும்.

பட்டினப்பாக்கத்தில் தேரோடும் வீதிகளும் அரசர்கள், அமைச்சர்கள், கலைஞர்கள், அரசு பணி செய்பவர்கள், யானைப் பாகர்கள், குதிரைப் பாகர்கள், ஆநிரை மேய்ப்பவர்கள் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட அனைவரின் வீடுகளும் இருந்தன.

செங்கற்களால் வீடுகள் கட்டப்பட்டு சுடுமண் ஓடுகள் மற்றும் கூரைகள் வேயப்பட்டு இருந்தன. நான்கு மாடிகள் கூட இருக்கும்.

குடிநீருக்கு வீடுகளில் 7 அடி ஆழம்வரை உரைகினறுகள் குடிநீர் ஊற்றுகளாக இருந்தன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்நகரில் 60,000 குடும்பங்கள் இருந்ததாகவும் எனில் சற்றேறக்குறைய 3 லட்சம் மக்கள் அங்கே இருந்து இருக்க வாய்ப்புள்ளது.

புகார் நகரம் முழுவதும் நான்கு காவதம், அதாவது முப்பது மைல் பரப்பளவு கொண்டது. அதில் இருபதில் ஒரு பாகம் மக்கள் வாழிடமும் மீதம் மற்ற இடங்களும் அமைந்ததாகும்.

அப்படிப்பட்ட நகரின் போர்க்களம் போல் பரபரப்பாக காட்சியளிக்கும் நாளங்காடியில் அனு, ஆதி மற்றும் மித்ரன் இக்கதையை கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்தனர்.

இதுவரை கடந்த காலத்திற்கு வந்திருக்கிறோம் என்று மட்டும் உணர்ந்து இருந்தவர்கள் இப்பொழுது இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி வந்து இருப்பதை உணர்ந்ததும் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

அதுவும் அனன்யாவுக்கு அவள் தான் மணிமேகலை என்று கூறியதும் மயக்கமே வரும் நிலை உண்டானது. அவளுக்கு அறிவியலைத் தவிர வேறு எதிலும் நம்பிக்கை இல்லை.

மறு பிறவி, மாயம் மந்திரம் என எதிலும்….. ஆனால் இன்று அவள் கேட்ட செய்தி அவள் நம்பிக்கைக்கு நேர் எதிராக இருந்தது.

ஆதி “இப்போ அவங்க எங்க இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டு போய்ப்பாக்கணும்…!!!” என்றான்.

“நாம எதுக்கு தேவையில்லாம அடுத்தவங்க வம்புக்கு போகணும் ஆதி..??” என்று மித்ரன் கேட்க..

“புராணத்தில் மணிமேகலைக்கு அபூர்வ சக்திகள் நிறைய இருப்பதாக சொல்லுவாங்க. நாம இங்கே வந்தது எப்படி, வெளியில போக போறது எப்படி இது மாதிரி பல குழப்பங்கள் நமக்கு இருக்கு… அதை மணிமேகலை கிட்ட கேட்டு தெளிவு பண்ணிக்கலாம். ஒருவேளை அவங்களால நம்ம வெளியில் போறதுக்கு உதவ முடியும். அதுக்காக தான் அவங்கள பாக்கணும்ன்னு சொல்றேன்…!!”என்று மறுமொழி கூறினான்.

“ஆதி… என்ன இப்படி தலைகீழ மாறீட்டீங்க…!??? நாம இந்த ஊருக்குள்ள நுழைஞ்ச போது இது என்ன மாயம் மந்திரமா அப்படின்னு கேட்ட நீங்க இப்போ இப்படி பேசுறீங்க” என்றாள் அனு, வியப்புடன்…

“இல்ல அனு… இதுல மாயமோ மந்திரமோ இல்லாட்டியும் தந்திரம் ஏதோ இருக்கு… அதுக்கு விடை மணிமேகலை கிட்ட இருக்கும்னு என் உள்ளுணர்வு சொல்லுது…!!!” என்று உறுதியாக சொன்னான்.

“சரி வாங்க போகலாம்…!!” என்று அனுவும் ஆதியை பின்தொடர்ந்தாள். இவர்கள் பேச்சு, செய்கை எதுவும் பிடிக்காத மித்ரன் வேறு வழியின்றி அவர்களை பின் தொடர்ந்தான்.

மணிமேகலை தனக்கு இல்வாழ்வில் விருப்பமில்லை என்றும் தான் யாரையும் மணந்து கொள்ளாமல் துறவியாகப் போவதாகவும் அரசவையில் தெரிவித்துவிட்டாள்.

அரசனும் அரசியும் மணிமேகலையை அழைத்து நடந்தவற்றை கேட்டறிந்த பின் அவளை திருப்பி அனுப்பிவிட்டனர்.

இப்போது மணிமேகலை அங்கிருக்கும் ஒரு புத்த விகாரத்தில் இருந்தாள்.

இதனை அறிந்து ஆதி அனு இருவரும் செல்ல முற்பட்ட போது மித்ரன் இடைமறித்து “ஆதி…!!! அனுகிட்ட அந்த நீலக்கல் பத்தி கேட்டியா…???” என்றான்.

“ம்ம்ம்ம்… அது நமது தங்கியிருந்த இடத்தில நான் வச்சிருக்கேன். போய் எடுத்துக்கலாம்…!!! எதுக்கு இப்போ போயி அத பத்தி விசாரிக்ரீங்க…!!!அது என்ன அவ்ளோ முக்கியமா…???” என்றாள் இவர்கள் ஊகம் அறியாததால்.

மித்ரன் உடனே “நாசமா போச்சு போ….!!!! நான் போய் அந்தக் கல்லைத் தேடி எடுத்துட்டு வரேன்…!!!! நீங்க போய் வேணா மணிமேகலைய பார்த்துட்டு வாங்க…!!!! எனக்கு வரதுக்கு விருப்பமில்லை…!!!” என்றுவிட்டு வேகமாக தங்குமிடத்தை நோக்கி நடந்தான்.

“ஆதி….!!!!! எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை….!!! அவர் ஏன் எப்பப்பாத்தாலும் கடுப்பாகிறார்..???” என ஒன்றும் புரியாமல் கேட்டாள் அனன்யா.

“அது ஒன்னும் இல்ல …. நீ வா… நாம போய் மணிமேகலையை பார்த்துட்டு வரலாம்…!! அவனுக்கு எல்லாமே கொஞ்சம் சரியா நடக்கணும்னு பதட்டம்… அவ்வளவுதான்…!!!” என்று அனுவை சமாதானம் செய்து அழைத்து வந்தான்.

அவர்கள் வந்த புத்த விகாரத்திற்குள் நுழைய முற்பட்டபோது …..

எதிரிலே மணிமேகலை பளிங்குபோல் தெளிந்த முகத்துடன் நின்றிருந்தாள்…..

அங்கே விருந்தினர் விடுதியில் மித்ரன் அனன்யாவின் அறையில் அந்தக்கல் கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தான்…

தொடரும்….

அனைத்து அத்தியாயங்களும் படிக்க

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments