விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 15

Pratheba Pratheba Follow Aug 08, 2020 · 4 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 15
Share this

அனுவை பத்து பேர் சேர்ந்து அழைத்துச் செல்லும்போது ஆதியும் மித்ரனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

“எதுக்காக டா அனுவ கூட்டிட்டு போறாங்க…!!” ஆதர்ஷ் அலைபாய்ந்தபடி கூட்டத்தின் உள்ளே ஓடினான்.

ஆனால் இவர்கள் நெருங்குவதற்கு முன்னரே அனுவைக் கூட்டிச்சென்றுவிட்டனர்.

“அவள நான் தானே பத்திரமா பத்துக்கணும்… இப்படி தொலச்சுட்டு நிக்கறேனே…!!! எப்படி நம்ம காலத்துக்கு போறதுன்னு வழியும் தெரியல….!!! அனு எங்க போனான்னும் புரியல…!!! என்ன வாழ்க்க டா இது….!!!!” தலையில் கைவைத்தபடி அங்கே நடுவீதியில் அமர்ந்தான் ஆதர்ஷ்.

அப்போது ஒரு கரம் வந்து அவன் தோள் பற்றியது…

“மச்சான்… என்ன செய்ய முடியும்…!!!” என்று சொல்லி ஆதி திரும்ப…

“என்னாச்சு ஆதி… ஏன் இப்படி நடு வீதியில உக்காந்துட்டீங்க…???” என்று கேட்டது அனன்யா….

ஆமாங்க… அனன்யாவே தான் !!!!!

அப்போ அங்க யார கூட்டிட்டு போனாங்க….????

அத அனு கிட்ட தான் தெரிஞ்சுக்கனும்….!!!!

“அனு குட்டி…!!!!!!!” பாய்ந்து கட்டிக்கொண்டான். அவள் எதிர்பாராத அணைப்பு. அவன் இதயத்துடிப்பு வேகம் இவளுக்கு கேட்குமளவு இருந்தது….

அனு அவனை விலக்கிவிட்டு….

“….ஆதி…!! போதும்… ஆதி..!!! என்னாச்சு…!!” என்றாள்.

“அங்க ஒரு பொண்ணு… அவ… நீ தான்… இல்ல இல்ல… உன்ன மாதிரியே ஒரு பொண்ணு…” என்று தடுமாறி வார்த்தைகளை கோர்க்க முயன்றான்.

“ஹேய்… ஆதி…!!

ரிலாக்ஸ்…!!!

எனக்கு ஒன்னும் ஆகல… பாருங்க…!!!” என்று அவனை சமாதானம் செய்தாள். மூவரும் அங்கிருந்த விருந்தினர் சத்திரத்தில் தங்கினர். ஆளுக்கொரு அறை ஒத்துக்கித் தந்தார்கள்.

அவரவர் தத்தம் இடத்துக்கு சென்று கொடுக்கப்பட்ட மாற்று உடை போட்டுக்கொண்டனர். கிட்டத்தட்ட அந்த காலத்து மனிதர்கள் போலவே மாறிப்போயினர்.

ஆதிக்கு அங்கே என்ன நடந்ததென்று அறிய ஆவல் தலை தூக்கியது. மேலும் அந்த பெண் எப்படி அனன்யாவைப் போலவே இருந்தாள் என்று யோசித்துக்கொண்டே அனன்யாவின் அறைக்கதவை தட்டினான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு யார் இந்நேரத்தில் என முதலில் பயந்தாலும், பின் சுதாரித்து எழுந்து போய் திறந்தாள்.

அங்கே ஆதி….

அவன் அவள் எப்போதும் பார்க்கும் ஆதியல்ல… மிகவும் வித்தியாசமாய் இருந்தான்.

இருவருக்கும் அவரவர் உடையினால் கொஞ்சம் தயக்கமும் வெட்கமும் இருந்தது….

“எல்லாம் சரியா இருக்கான்னு பாக்க வந்தேன்… வேற எதுவுமில்ல… பத்திரமா தூங்கு அனு..!!!” என்றான் ஆதி.

ஏதோ சொல்ல வந்தானோன்னு அனுவுக்கு தோணுச்சு…!!! இருந்தாலும்… “எனக்கும் புது இடம்ன்னு ஒரு மாதிரி இருந்துச்சு..!! உங்கள பாத்தோன்ன கொஞ்சம் பயம் மாறியிருக்கு…! தேங்க்ஸ் வந்ததுக்கு…!!” என்று மட்டும் சொல்லிவிட்டு புன்னகைத்தாள்.

“உன் தேங்க்ஸ் எல்லாம் நீயே வெச்சுக்க தாயி… மறுபடியும் எங்கேயாவது போயிடாத…!!! உன்ன காணும்னதும் எனக்கு உயிரே போயிடுச்சு…!!” என்று சொன்ன ஆதியை பார்க்கையில், அந்த நிமிடத்தில் அவன் உணர்ந்த வலி கண்ணில் தெரிந்தது.

அதை உணர்ந்த அனு, சூழ்நிலையை சகஜமாக்க நினைத்து“இனிமே பண்ண மாட்டேன் நாதா…!!! தங்கள் ஆணைப்படியே நடப்பேன்…!! போதுமா மகாபிரபு…???” என்று கண்சிமிட்டினாள்.

“கலாய்க்ரியா என்னை…!!! அப்டியே அந்த ஆளுங்ககிட்ட உன்ன புடிச்சு குடுத்திருக்கணும்…!!!!” சொல்லிவிட்டு ஒரு குறும்பு பார்வையோடு சுவரில் சாய்ந்துகொண்டான்.

“செஞ்சு தான் பாருங்க.. சிறுத்தை சிக்கும்… சில்வண்டு சிக்காது…!! நான் பறந்துடுவேணாக்கும்…!!” என்றாள் அனு.

“பேசினா நிறுத்தவே மாட்டியே… சரி நான் வரேன்.. ஒழுங்கா தூங்கு போ..!!!” என்றுவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

சில்லென்ற கடற்கற்று…

புதுவிதமான இடம்….

தனிமை…

எல்லாம் சேர்ந்து ஒரு மயக்கும் சூழல் நிலவியது….

அன்று நடந்தவற்றை எல்லாம் அசைபோட்டபடியே இருவரும் தத்தம் அறையில் அமர்ந்து ஜன்னல் வழியே வழியும் நிலவின் ஒளியில், மகிழ்வின் அலையில் மிதந்திருந்தனர்……


ஆர்ப்பாட்டமின்றி புலர்ந்தது அந்த நாள்… அதிகாலை முதல் ஆள்நடமாட்ட ஓசைகள் கேட்கத்தொடங்கின. இதுவும் ஒரு தூங்காநகரம் தான். நம்ம ஆட்கள் மூவரும் முதல் நாள் பட்ட அலைச்சல் மற்றும் சோர்வு காரணமாக, விடிந்து காலை ஏழு மணிக்கு பிறகே கண்விழித்தனர்.

தங்கள் உடைகளைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லையென்றாலும் வேற்றூர் மனிதர்கள் என்று தெரியும்படி இருந்ததால், அந்த ஊர் மக்களைப்போலவே உடுத்திக்கொண்டனர்.

அனன்யாவை போன்றே இருந்த பெண் யார் என்று தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஆவல் மேலிட்டது. அவர்கள் அங்கிருந்த கடைக்காரரிடம் விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர் .

அவர்கள் இருந்த இடம் நாளங்காடி. அதாவது பகலில் அமையப்பெற்ற சந்தை. அங்கு உணவு பொருட்களும், சமைப்பதற்கு ஏற்ற பொருட்களும், குடி வாழ்வுக்கு இன்றியமையாத பொருட்களும் இருக்கும்.

கடைகள் இருந்த இடம் முழுதும் சோலைபோல் அடர் வனம். மலர்கள் எங்கெங்கும் மணம்வீசி மலர்ந்திருந்தன.

அவற்றின் நடுவே பனையோலை தடுக்குகள் கொண்டு செய்த அமைப்புகள் மேல் அடுக்கியும் அல்லது நிலத்தில் பரப்பியும் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த ஒருவர் வந்து, இவர்கள் யாரென்று கேட்டறிந்தார். தங்கள் உண்மையான பெயர்களை மறைத்து, அக்கால பெயர்கள் சொன்னான். தன் பெயர் ஆதன், மித்ரன் பெயர் நல்லன், அனுவின் பெயர் அனிச்ச மலர் என்று ஆதி பொய்சொல்ல… அனு அந்த ஆள் சென்றபிறகு, “ எதுக்கு பேர் எல்லாம் மாத்தி சொல்றீங்க…?? உங்களுக்கு எல்லாம் நல்ல பேரா வச்சுக்கிட்டு எனக்கு ஏதோ அனிச்சோம் இனிச்சோம் ன்னு சொல்றீங்க…!!” என்றாள் உதட்டை சுளித்தபடி.

“எல்லாத்துக்கும் இப்படி முகத்தை சுருக்குறல்ல அதான் அந்த பேரு… பொருத்தமா தான் வச்சேன்…!!!” என்றான் கேலியாக.

“நம்மோட உண்மையான கதை தெரிஞ்சா சூனியகாரங்கன்னு ஊரைவிட்டு விரட்டிடுவாங்க…!! அதனால இந்த பேர நம்ம ஊர்போய் சேர்றவரை வச்சுப்போம்…!!!”என்று மித்ரன் சொன்னதை ஆதி சரியென்று ஆமோதித்தான்.

அனன்யாவுக்கும் அதுவே சரியென்று பட்டது. அப்போது அவர்கள் இருந்த நாளங்காடியின் ஒரு கடையில் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

அங்கிருந்த ஒரு பலகாரக் கடையில் சென்று அமர்ந்தார்கள். இவர்கள் அதுவரை பார்த்திராத பலவகையான பண்டங்கள் அங்கே இருந்தன.

கையில் காசு இல்லாமல் உணவு எப்படி கிடைக்கும் என்று அவர்கள் எந்த உணவகம் அருகிலும் செல்லவில்லை. ஆதி அந்த கடைக்கார பெண்மணியிடம் “அம்மா…!! நாங்கள் வெளியூரிலிந்து வந்திருக்கிறோம்..!! பாதை மாறி இங்குவந்து சேர்ந்துவிட்டோம்… கையில் பணமில்லை.. எங்கே உணவு கிடைக்கும்..??”என்று கேட்டான்.

“காசு பணம் எதுவும் தேவை இல்லை…!! வந்தவர்களுக்கு உணவு அளிப்பதை காட்டிலும் பெரிய நன்மை என்ன இருந்துவிடப் போகிறது…!!! நீங்கள் வாருங்கள் இங்கேயே உணவு உண்ணலாம்…. எந்த உணவு பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள்…!!!” என்றார். நம் நண்பர்கள் மூவருக்கும் அக்கால மனிதர்களின் மனம் எவ்வளவு பெரியது என்ற வியப்பு உண்டானது.

மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பும் பொழுது அப்பெண்மணியிடம் ஆதி விடைபெற்றபின் சற்று யோசித்துவிட்டு…

“அம்மா உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்…!!!” என்றான்.

“கேளுங்கள்…!!! என்ன உதவி வேண்டும்…!!” என அப்பெண் கேட்க…

“இது என் மனைவி அனிச்ச மலர்…!! நேற்று இரவு நாங்கள் இந்நகருக்கு வந்து சேர்ந்தபோது இவளைப் போலவே ஒரு பெண்ணை காவலர்கள் அழைத்துச் சென்றனர்… உங்களுக்கு அவர் யாரென்று தெரியுமா…??” என்று கேட்டான்.

அப்பெண்மணி உடனே முகம் மாறி “நானே உள்ளே நுழைந்ததும் உங்களிடம் கேட்க நினைத்தேன்…. நீங்கள் கடைத்தெருவில் நடந்து வரும் பொழுது அனைவரும் இவளைப் பார்த்ததை நீங்கள் அறியவில்லை. ஆனால் நான் அறிவேன்…. !!!” என்றார்.

இது இவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது…

அவர் தொடர்ந்தார்…

“நேற்று நீங்கள் பார்த்த பெண் இந்நகரின் பெரும் செல்வந்தருக்கும் ஆடலரசி ஒருவருக்கும் பிறந்த மகள். அவளுக்கும் உன் இல்லாளுக்கும் உண்டான தோற்ற ஒற்றுமை எனக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

புகார் நகரின் இளவரசன் அவள் அழகினைக் கண்டு அவளை தன் மனைவியாக்கி இந்நாட்டின் அரசியாக்கவும் எண்ணினார்.

ஆனால் அவள் தாய், தன் இல்லற வாழ்க்கை சரியாக அமையாததால் அவளும் துறவு பூண்டு தன் மகளையும் துறவியாக்கவே விரும்பினாள்.

முதலில் அந்த இளம்பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் இவன் பின்தொடரப் பின்தொடர அவளுக்கும் இவன் மேல் காதல் உண்டானது. ஒரு கட்டத்தில் இந்த சஞ்சலம் பெரிதானதை உணர்ந்த அவள் அம்மா ஒரு பௌத்த பெண் துறவி மூலம் இவள் மனதை மாற்றி துறவியாக்கிவிட்டாள்.

ஆனால் குடும்பத்தின் மற்ற மூத்த பெண்கள் இதனை விரும்பாமல் அரசகுமரனிடம் அப்பெண்ணை மணக்க வற்புறுத்தினர்.

எனவே அந்தப்பெண்ணை அழைத்துவரும்படி அரசி கூறியதன் பேரிலே தான் நேற்று அவள் சென்றாள்….!!!” என்று முடித்தார் அப்பெண்மணி.

கதையில் ஒன்றிவிட்ட அனு“அவள் பெயர் என்ன அம்மா…????” என்று கேட்டாள். அதற்கு அவர் சொன்ன விடை…..

“மணிமேகலை……!!!!!!!!!!!!”

தொடரும்…..

அனைத்து அத்தியாயங்களும் படிக்க

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments