விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 12

Pratheba Pratheba Follow Aug 06, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 12
Share this

இவர்களை நோக்கி வேகமாய் நகர்ந்து வந்தது அச்சுழல்….

மாலுமிகள் எச்சரிக்கை மணியை இயக்க, பயணிகள் அனைவரும் அரைதூக்கத்தில் அலறியடித்து கப்பல் தளத்தில் கூடினர்.

முன்பே அங்கிருந்த நம் நண்பர்களும் அந்த ஒலி கேட்டு தான் சூழப்போகும் ஆபத்தை உணர்ந்தனர்.

ஆனால் அனு, ஆதி, மித்ரன் மூவரும் கப்பல் தளத்தின் ஓரத்தில் நின்றதால், அவர்கள் மீது புயலின் போது பேரலையொன்று மோதியது…

மூவரும் அலையால் தாக்கப்பட்டு மயங்கியபோதிலும் அனு மற்றும் ஆதியின் கரங்கள் கோர்த்தபடியே இருந்தன.

அனு மெதுவாய் கண்விழித்தாள்…

எழ முயலுகையில் ஆதியின் கைகள் கோர்த்திருப்பது புரிந்து கொஞ்சம் நிம்மதி வந்தது….

கொஞ்சம் நாணமும் அதோடு சேர்ந்திருந்தது…

கூடவே இரவு அவன் பேசியது, இவள் காதலை சொன்னது என்று அனைத்தும் உள்ளே ரீங்கரித்தது ரஹ்மான் இசைபோலே…

அதுவொரு கனவுபோல் தோன்றியது… நீங்காத புன்னகையை அந்த நினைவுகள் அவள் முகத்தில் தீட்டி வைத்தன பிக்காஸோ ஓவியம்போலே….

அவர்கள் கைகளில் அதே கல், மர்மப்புன்னகையோ மந்திரபுன்னகையோ என்று புரியாதபடி ஒருமுறை நீல மின்னல் ஒன்றை உமிழ்ந்துவிட்டு அமைதியானது….

ஆதியும் மயங்கியிருந்தான்… மித்ரன் அவனருகில் மயங்கியிருந்தான்…. அனு ஆதியை எழுப்ப அவன் தூக்கிவாரிபோட்டு “அனுனுனு…….” என்று அவள் கைகளை தேடியபடியே எழுந்தான்.

அந்த களேபரத்தில் மித்ரனும் மயக்கம் தெளிய, மூவரும் அப்போது தான் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்றறிய எழுந்து பார்த்தனர்….

இன்னும் விடிய சிலமணிநேரம் இருக்கும்போல் தெரிந்தது…. நன்கு சூழ்ந்த இருள்… ஆனால் பூரண நிலவொளி அவர்களுக்கு சுற்றுப்புறத்தை தெளிவாய் காட்டியது…

அந்த இடம் அவர்களுக்கு சற்றும் பரிச்சயமற்றதாய் இருந்தது…

ஆம்….

அதுவொரு ஆளரவமற்ற கடற்கரை……

வெகு தொலைவில் ஒரு நகரம் தென்படுகிறது…

மூவரும் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

“நாம எங்க இருக்கோம் இப்போ..? நம்ம கூட இருந்தவங்க எங்க போனாங்க…?” முதலில் அந்த மௌனத்தை உடைத்தது மித்ரன்.

அனு முகத்தில் பயம், அழுகை எல்லாம் கலவையாய் தெரிந்தது….

மித்ரன் தன் செல்போன் எடுத்து லொகேஷன் அறிய முயல.., அது ‘ஆன்’ ஆகவில்லை. மற்றவர்கள் மொபைலுக்கும் இதே நிலை தான்…

வேறுவழியின்றி தொலைவில் தெரிந்த அந்த நகரத்தை நோக்கி கடற்கரை வழியே நடக்கத்தொடங்கினர்…

பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமான, செழிப்பான ஊராகத்தெரிந்தது. நெருங்க நெருங்க கரையோரத்தில் பெரிய கட்டிடங்கள் மற்றும் துறைமுகம் போன்ற அமைப்பும் இருப்பது தெரிய வந்தது.

“ஹேய்… நில்லுங்க… அங்க பாருங்க… இருக்க ஆளுங்கள பாத்தா இந்த இடம் இந்தியா மாதிரி இல்ல… தே லுக் லைக் யூரோப்பியன்ஸ்…” அனு வியப்பில் கத்த ஆரமிக்க, அவள் முழுதாய் முடிக்கும் முன்பே ஆதி அவள் வாயைப்பொத்தினான்.

“அனு குட்டி… கத்தி மாட்டிவிட்டுடாத டீ… இடமே ஒரு மார்க்கமா இருக்கு…” ஆதி அவள் காதருகில் மெல்ல சொல்லிவிட்டு பின் ஏதோ உணர்ந்தவனாய் சட்டென விலகி விட்டான்…

அனு முதலில் ஆதி அவள் வாய்பொத்திய நிமிடத்தில் கொஞ்சம் கோபமானாலும், சிறிது சிறிதாக அவன் அருகாமயை ரசிக்கத் தொடங்கினாள்.

மித்ரன் முன்னால் நடந்து சென்றுகொண்டிருக்க, அனு இருட்டில் ஒரு இடத்தில் தடுமாறி ஆதியின் மேல் இடித்துவிட்டு விழப்போனாள். அங்கே பெரும் பள்ளம்…

கடற்கரை மணல் தாண்டி துறைமுகத்தை அவர்கள் அப்போது அடைந்திருந்தனர். நல்லவேளையாக ஆதி அவளைப் பற்றி நிறுத்தினான்.

அந்த பள்ளத்தைக் கண்டதும் அனுவின் இதயம் படபடவென்று அடிக்கத்தொடங்கியது. “அனு… பாத்து வர மாட்டியா…!! ஏதாவது ஒரு ஏடாகூடம் பண்ணிட்டே இருக்கியே…!!!!” என்று அவன் வேறு கோபமாக சொல்ல அனு சற்று கலங்கிப்போனாள்.

கண்களில் நீர் பளிச்சிட்டதை அந்த இருளிலும் அவன் கவனிக்க தவறவில்லை….

உடனே “மன்னிச்சுக்கோ டா… எனக்கும் பதட்டம்… உன்ன முதல் தடவையா வெளில கூட்டிட்டு வந்து இப்படி ஆயிட்டுச்சேன்னு…!!! “ அருகில் வந்து கைகள் பற்றிக்கொண்டான்.

“ம்ம்ம்ம்…!” என்றாள் அவள்.

“பொறுமையா இருடா அனு… எதுவா இருந்தாலும் பதட்டப்படாத…!!!” ஆதி அவள் தோளில் கைவைத்து சொன்னான்.

“என்னங்க..?? எப்படி இந்த சூழ்நிலையில பொறுமையா இருக்க முடியும்??” அனு விசும்பியபடி கேட்டாள்.

“யூ லைக் அட்வென்ட்சர்ஸ் ரைட் !!!” என்றான் ஆதி அவள் கையிரண்டும் இறுக பற்றிக்கொண்டு….

“ம்ம்ம்ம்…. ஆனா…” என்று அனன்யா இழுப்பதற்குள்…

“ஆனா… ஆவண்ணா லாம் இல்ல… என்ன நடந்தாலும் சமளிப்போம் வா” என்று சொன்னான் ஆதி.

“ம்ம்ம்….” என்றாள் அனு.

“என்ன இப்போல்லாம் ம்ம்ம்ம் மட்டும் தான் வருது, வேற வார்த்தையே வரதில்ல…” அவள் தாடையை நிமிர்த்தி கேட்டான்.

கண்ணில் நீர் இன்னும் கடகடவென வழிந்து கொண்டிருந்தது.

அவள் கண்ணீரை துடைத்து விட்டு “என்ன பாரு…” மிருதுவாக பேசினான்.

அவள் அப்படியே நின்றதும், “ கண்ண திறந்து பாருன்னு சொல்றேன்ல…” இன்னும் மெதுவாய் சொன்னான்.

அனு கண்திறந்தாள்.

“மேலே பாரு… இந்த விண்மீன் எல்லாம் இன்னைக்கு நேத்து மொளச்சதா…” சொல்லிவிட்டு அவள் கண்களைப் பார்த்தான்.

பின் அவனே தொடர்ந்தான்…

“நிச்சயம் கிடையாது…..கண்டிப்பா எத்தனையோ கோடி ஆண்டுக்கு முன்ன உள்ளது… இப்போ அதெல்லாம் இருக்குமோ… இல்லை தன் ஒளியை உலகத்துக்கு கொடுத்துட்டு கரஞ்சு போயிருக்குமோ தெரியல… “ வான் பார்த்து அவன் பேசிக்கொண்டே போக…

அனுவோ அவன் பேச்சுடன் அவன் வசீகரத்தையும் உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.

எங்கேயிருந்தாலும் அவளுக்கென்று ஒரு கரிசனத்தை தரும் கண்கள்… அடர் புருவம்… முதல்முறை புகைப்படம் பார்த்ததில் இருந்து அவன்மீது கொண்ட ஈர்ப்பு….

அவன் குரல் அவளை நினைவுலக்கிற்கு மறுபடி அழைத்து வந்தது….

“எதுவுமே நிரந்தரம் இல்ல டா… சீக்கிரமா வீட்டுக்கு போயிடுவோம்.. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஆயிரம் வருஷம் வாழப்போறோம்…இதெல்லாம் சீக்கிரம் கடந்து போயிடும்… என்ன நம்புறல்ல…!!!”

“மம்ம்ம்ம்ம்…..” கண்கள் பனிக்க புன்னகைத்தாள்.

இருவருக்கும் விவரிக்க முடியாத உணர்வுகள்.

விழிகள் விலகாமல்….

கால்கள் நகராமல்…

ஒரு நிமிடம் …

அந்தவொரு பார்வைக்காகவே அவனுடன் ஆயிரம் ஆண்டு வாழலாம்…

“டேய்… என்னங்கடா நடக்குது இங்க… எங்க இருக்கோம்னே தெரில… நீங்க என்ன சாங் ஏதும் பாட போய்டிங்களா…!!!” இருக்கும் இடம் மறந்து இமைக்காமல் நின்றிருந்த இருவரையும் மித்ரன் அலுப்புடன் வந்து உலுக்கினான்.

அனு விலகி நின்று சங்கோஜத்துடன் வேறு திசையில் திரும்பி புன்னகைத்தாள்….

அப்போது தூரத்தில் கண்ட தோற்றம் அனன்யாவுக்கு மயிர்கூச்சு உண்டாக்கியது….

தொடரும்……

அனைத்து அத்தியாயங்களும் படிக்க

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments