விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 10

Pratheba Pratheba Follow Aug 01, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 10
Share this

இளந்தென்றல் இதமாய் வீசிக்கொண்டிருந்தது… இந்தப்பயணம் முடியாமல் நீளவேண்டுமென நினைத்தவனாய், நிதானமாக வாகனத்தை செலுத்தினான் ஆதர்ஷ்.

ஆதவன் மறையும் தருணம்…

இரவும் பகலும் சேரும் அந்த நேரம்…

அந்தி நேரம்….

வானம் நாணம் கொண்டதுபோல் சிவந்திருந்தது….

கொஞ்சம் கருமேகங்கள் அச்செம்பொன்னொளியில் தகதகத்து மிதந்தன…

“சந்தியாக்கால மேகங்கள்…

என் வானில் ஊர்வலம் போகுதே…

பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே….

உன் நடையின் சாயலே தோணுதே…” பாடல் மென்மையாய் காற்றில் கரைந்துகொண்டிருந்தது…….

பாடல் வேறு மனநிலைக்கு கொண்டுபோய்டுமோ என்னும் நினைவில் அவள் பேசத்தொடங்கினாள்.

அனன்யா - காக்க காக்க படம் பாத்திருக்கீங்களா…. எனக்கு அது ரொம்ப பிடிச்ச படம்… க்ளோஸ் டூ ஹர்ட்னு கூட சொல்லலாம்…

ஆதர்ஷ் – நானும் நிறைய தடவ பாத்திருக்கேன்…. !!!! பாட்டு… படம் பண்ண விதம்… எல்லாமே அருமையா இருக்கும்… ஜோ ன்னா ரொம்ப பிடிக்கும்…

என் கனவில் ஆஆஆ…

நான் கண்ட…. ஆஆஆ… நாள் இது தான்…. கலாபக் காதலி….

இவ்வரிகள் வந்ததும், பேசுவதை நிறுத்தி காதலோடு அவளைப்பார்த்தான்….

அவன் மௌனம் ஆயிரம் வார்த்தைகள் சொல்லிவிட தவித்தது.

அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள், சட்டென்று அவன் அமைதியானதும் இப்பக்கம் திரும்பினாள்.

விழி மேக மோதலில் கோடி கோடி எண்ணங்களும் ஆசைகளும்…. மின்னல், மழையாய் பொழியத்தொடங்கின…..

வெளியிலும் சட்டென்று திரண்ட மேகங்கள் கொஞ்சம் ரம்மியமான சூழ்நிலை உண்டாக்கின.

வந்து ஒட்டிக்கொண்ட வெட்கப்புன்னகையை மறைத்து “ எப்டி எங்க வீட்ல பர்மிஷன் வாங்கினீங்க… ரொம்ப கஷ்டமாச்சே…!!!!” என்று பேச்சை திசைமாற்றினாள்.

ஆதர்ஷ் - ஹ..ஹா.. ஹா…ஹா… உண்மைய சொன்னேன்…(ரஜினி தோரணையில்)

அனன்யா - பார்ரா… என்ன உண்மைங்கய்யா அது… ???

எனக்கு அந்த உண்ம தெரிஞ்சாகனும் சாமிஈஈஈ….(முதல் மரியாதை படத்து வசனம் போல இழுத்தாள்)

ஆதர்ஷ் - வா அனு… அங்க போனா நீயே தெரிஞ்சுப்ப…


உங்கள்ல பாதிப்பேர் யூகிச்ச மாதிரி…

பூம்புகாருக்கு அவளோட ஆராய்ச்சி நிமித்தமா தான் போறாங்க….!!

கண்டுபிடிச்சவங்க காலரை தூக்கி விட்டுக்கோங்க….!!!!!

அவங்க தனியா இல்ல… கொஞ்சம் பயிற்சி பெற்ற ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் மீனவர்கள், ஒரு சில வரலாற்று அறிஞர்கள், சில ஆய்வாளர்கள் எல்லாரும் சேர்ந்து பூம்புகார் கடல் பகுதியை ஆய்வு செய்ய போறாங்க… அவங்களோட நாமும் போறோம்….

கோவா வில் இருக்கும் நேஷனல் ஓஷனோகிராபி டிப்பார்ட்மெண்ட்(தேசிய கடல்சார் ஆய்வு மையம்) கிட்ட கடலாய்வு செய்யற குழுவோட இவங்களும் சேர்ந்துக்க அனுமதி வாங்கினான்….

ஆனா… நமக்கு அப்படியேதும் தேவையில்ல…

வாங்க அவங்களோட போலாம்……..

மதுரையிலிருந்து பூம்புகார் போக சாதாரணமா ஆறு மணிநேரம் போதும்… ஆனா இவங்க பொறுமையா எட்டு மணிநேரம் காவிரியாறு அப்புறம் அதன் கிளை நதிகள் கூடவே பயணம் செஞ்சு சோழன் வாழ்ந்த அந்த சொர்க்க பூமிய மிதிச்சாங்க…

அங்க போய் இறங்கியதும்…

“இது மித்ரன். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷனோகிராபி (தேசிய கடல்சார் ஆய்வு மையத்தில்) ரிசர்ச் ஸ்காலரா இருக்கான். இவன் மூலமா தான் தெரிஞ்சுகிட்டேன் இந்த ப்ராஜெக்ட் பத்தி…” உயிர் நண்பனை தன் உயிருக்கு அறிமுகம் செய்துவைத்தான்.

“வணக்கம்…உங்கள பாத்ததுல ரொம்ப மகிழ்ச்சி…” என்று அனன்யா சொல்லி புன்னகைக்க மித்ரனும் தலையசைத்து புன்னகைத்தான்.

“உங்கள பத்தி மட்டும் தாங்க இவன் பல நாளா பேசிட்டு இருப்பான். அப்புறம் நான் தான் பொண்ணு பாக்க வந்தப்போ போன் பண்ண ஆளு… இந்த கேடி என்கிட்ட நீங்க தான் பொண்ணுன்னு சொல்லவேயில்ல கடைசிவரை…!!!!” என்று சொல்லி சிரித்துவிட்டு…

“உங்களுக்கு கடல் பயணம் ஒத்துக்குமில்ல…!!!” என்று கேட்டான்.

அதைகேட்டவுடனேயே அவள் விழிகள் ஆர்வத்தில் விரிந்தன….

“எனக்குலாம் ஒன்னும் ஆகாதுண்ணா… எப்போ கெளம்புவோம்ன்னு ஒரே எக்ஸைட்மெண்டா இருக்கு…” அவள் வார்தைகளைப் போலவே உடலும் மனமும் துள்ளத் தொடங்கின.

ஆதர்ஷ் அங்கே தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கப்பலைக் காண்பித்து விளக்கத்தொடங்கினான்.

“ இது கடல்சார்ந்த ஆராய்ச்சிகளுக்காகவே தனியா வடிவமைக்கப்பட்ட கப்பல். ஒலி, ஒளி பயன்படுத்தி கடலின் தரை தளத்தை கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பம் இதுல இருக்கு. அதோட ஆழ்கடல் நிகழ்வுகளை படம் அல்லது காணொளியா பதிவு பண்ணிகவும் முடியும்” விலாவரியாக சொல்லிக்கொண்டிருந்தான்.

அனு… சரி இனி அனுன்னே கூப்பிடுவோமா ???

அனு அவன் சொன்னதையெல்லாம் குறிப்பு எடுத்துக்கொண்டாள்….

“இங்க இருந்து நாம படகு மூலமா கப்பலுக்கு போவோம்… இந்த இடம் ஆழம் குறைவா இருக்கதுனால கரைக்கு கொண்டு வர முடியாது… ஆனா முன்னொரு காலத்துல, உலகிலேயே பெரிய துறைமுக நகரமாக இருந்த இடம் இது… இப்போ இருக்க நிலைமையை பாத்தா, யாருமே நம்பமாட்டாங்க….” என்று சொல்லி முடித்தான் மித்ரன்.

“மச்சா… மூச்சு விட்றா… நாங்க பொறுமையா தெரிஞ்சுக்கறோம்…!!” என்று ஆதர்ஷ் சொல்ல…

அனைத்தையும் அனு ஆர்வம் நிரம்பி வழியும் கண்களுடன் கேட்டுக்கொண்டிருந்தாள்….

இன்னும் என்ன இருக்கு என்பதுபோல் பார்க்க…

“இனி பாடம் எடுத்தேன்னா இவன் அடிக்க வந்துடுவான் போல… நீங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க… நான் போய் மத்தவங்கள பாத்துட்டு வரேன்…!!!” என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

கடல்காற்று சில்லென்று வீசியது… கைகள் கோர்த்து அந்த கடற்கரையில் நடக்க வேண்டுமென்பதுபோல் அவளை நெருங்கினான்…

அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு… “இங்கே பத்து நாள் தங்கப்போறோம்… தனித்தனி அறைகள் குடுத்துடுவாங்க… நிச்சயமா நமக்கு மறக்கமுடியாத அனுபவமா இருக்கும்…. அனு உனக்கு பிடிச்சுருக்கா…???” என்றான் அவள் விழிகளை நேரே பார்த்து…

“மம்ம்ம்ம்….” என்று சொல்லிவிட்டு வேறுபுறம் திரும்பினாள்…

“என்ன ம்ம்ம் மட்டும் தானா…???” கொஞ்சம் துனுக்குற்ற குரலில் கேட்டான்.

“எனக்காக இவ்ளோ செய்றீங்க… நான் பதிலுக்கு என்ன செய்யப்போறேன்… !!!!” கண்களில் உணர்வு மேலிட அவனைப்பார்த்தாள்.

சட்டென்று மனம் லேசாகிவிட “ஐ லவ் யூ சொல்லு….!!!” குறும்பு கொப்பளிக்க பதில் சொன்னான் ஆதர்ஷ்.

“ஐ லவ் யூ பேபி…!!!!” தரையில் தீவிரமாய் ஏதோ பார்ப்பதுபோல் முகம் வைத்துக்கொண்டு சொன்னாள்.

“ என்ன சொன்ன… கேக்கல…” அவன் வியப்பில் கேட்டான்…. இந்நேரத்தில் அவள் சட்டென்று சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை பையன்…

“ஒன்னுமில்ல… போங்க… எனக்கு பசிக்குது… சாப்பிட ஏதாச்சும் வேணும்….” நான் மறுபடி சொல்ல மாட்டேன் என்பதுபோல் பழிப்பு காண்பித்தாள் முகத்தில்…..

“ஹேய்… திருடி… சொல்லு மறுபடி….” அவள் அருகில் அவன் நெருங்க… அவள் ஓடிப்போய் காருக்குள் அமர்ந்துகொண்டாள்.

செவ்வானம் போல சிவந்துபோனது அவள் முகம்….

கொஞ்சம் கொஞ்சமாக மூச்சிழுத்து தன்னைச் சமநிலைப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தாள்…..

நல்லவேளை அவன் பின்தொடரவில்லை….

அவள் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து தூர நின்று புன்னகைபூக்க இரவையும் விண்மீன்களையும் ரசித்துக்கொண்டிருந்தான்……

இவர்கள் நினைப்பது போல அவ்வளவு இனிமையாகுமா இப்பயணம்…………….. !!!!!!!!!!!!!

தொடரும்……

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments